இந்தியாவுக்கு நான்காவது இடம்: நிறைவு பெற்றது காமன்வெல்த் விளையாட்டு

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில் 13 தங்கம் உட்பட 39 பதக்கம் கைப்பற்றிய இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்தது. காமன்வெல்த் விளையாட்டு நிறைவு பெற்றது. 5000 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெண்கலம் வென்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடந்தது. ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில், இந்தியா சார்பில் குல்வீர் சிங் 28, பங்கேற்றார். இலக்கை 13 நிமிடம், 24.95 வினாடியில் கடந்த குல்வீர் சிங், 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டு 5000 மீ., ஓட்டத்தில் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தவிர இது, இம்முறை இவர் பெற்ற 2வது பதக்கம். ஏற்கனவே 10,000 மீ., ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். காமன்வெல்த் விளையாட்டு அரங்கில் ஒரு சீசனில் தடகளத்தில் இரண்டு பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியரானார் குல்வீர்.

உ.பி.,யை சேர்ந்த ராணுவ வீரரான குல்வீர் சிங், ஏற்கனவே ஆசிய விளையாட்டு (2022), 10,000 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்தார். குல்வீர் சிங் கூறுகையில், ''காமன்வெல்த் விளையாட்டில் 2 பதக்கம் வென்றது மகிழ்ச்சி. இருப்பினும், தங்கம் வெல்ல முடியாதது வருத்தம். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, பதக்க விழாவில் நமது தேசிய கீதத்தை இசைக்க செய்வதே இலக்கு,'' என்றார்.
இஷ்ரூப் தோல்வி: பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் இஷ்ரூப் நரங், கனடாவின் கோராலி காட்பவுட் மோதினர். இதில் ஏமாற்றிய இஷ்ரூப் 'இப்பான்' முறையில் (0-100) தோல்வியடைந்தார்.


தேவ் மீனா ஏமாற்றம்: ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் இந்தியா சார்பில் குல்தீப் குமார், தேவ் குமார் மீனா பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 5.30 மீ., தாவிய தேவ் குமார் மீனா, 4வது இடம் பிடித்து ஏமாற்றினார். மற்றொரு இந்திய வீரர் குல்தீப் குமார் (5.10 மீ.,) 6வது இடத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் கர்டிஸ் மார்ஷல் (5.85 மீ.,) தங்கத்தை தட்டிச் சென்றார். இது, காமன்வெல்த் அரங்கில் இவரது 'ஹாட்ரிக்' தங்கம்.


இந்தியா 6வது இடம்: கலப்பு அணிகளுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் விஷால் தென்னரசு, அன்சா பாபு, சந்தோஷ் குமார் தமிழரசன், ராஷ்தீப் கவுர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய துாரத்தை 3 நிமிடம், 20.32 வினாடியில் கடந்த இந்திய அணி 6வது இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களை ஜமைக்கா (3:10.97), இங்கிலாந்து (3:11.58), நைஜீரியா (3:12.85) தட்டிச் சென்றன.

ரொனால்டோ '20': ஆண்கள் தனிநபர் சைக்கிள் பந்தயத்தின் 'டைம் டிரையல்' பிரிவு பைனலில், இலக்கை ஒரு நிமிடம், 04.191 வினாடியில் கடந்த இந்தியாவின் ரொனால்டோ சிங் 20வது இடம் பிடித்தார்.

அடுத்து ஆமதாபாத்தில்...


கிளாஸ்கோவில், ஜூலை 23ல் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் துவங்கியது. இதில் 74 நாடுகளை சேர்ந்த, 2729 பேர் பங்கேற்றனர். 11 நாட்கள் நடந்த இப்போட்டி நேற்றுடன் நிறைவு பெற்றது. அடுத்த சீசன், வரும் 2030ல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடக்கவுள்ளது.
'தி ஹைட்ரோ' மைதானத்தில் நிறைவு விழா அணிவகுப்பில், இந்திய மூவர்ணக்கொடியை குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் ஏந்தி வந்தார். வரும் 2030ல் போட்டியை நடத்துவதற்காக, காமன்வெல்த் விளையாட்டு கொடி, ஆமதாபாத் நகரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இது அதிகம்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' போட்டிகளில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தது. கடந்த 6 சீசனில் (2002-2022) 'பாரா' போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என, மொத்தம் 7 பதக்கம் மட்டுமே கிடைத்திருந்தது.

ஆஸ்திரேலியா முதலிடம்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்தது. 70 தங்கம், 45 வெள்ளி, 56 வெண்கலம் என, 171 பதக்கம் வென்றது. இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்தது. இம்முறை 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என, 39 பதக்கம் வென்றது.

* கிளாஸ்கோ, காமன்வெல்த் விளையாட்டில் 10 போட்டிகள் மட்டுமே இடம் பெற்றன. இந்தியா 13 தங்கம் உட்பட 39 பதக்கம் பெற்றது. துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் இடம் பெறாதததால், கூடுதல் பதக்கம் வெல்ல முடியவில்லை.


தடகளத்தில் ஆதிக்கம்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் அசத்திய இந்திய நட்சத்திரங்கள் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என, 39 பதக்கத்தை தட்டிச் சென்றனர். இதில் தடகளத்தில் அதிகபட்சமாக 16 பதக்கம் (3 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றனர். குத்துச்சண்டையில் 10 (7 தங்கம், 3 வெள்ளி), பளுதுாக்குதலில் 8 (ஒரு தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம்), ஜூடோவில் 4 (2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), பாரா 'பவர்லிப்டிங்'கில் ஒரு பதக்கம் (வெண்கலம்) கைப்பற்றினர்.

21 பதக்கம்... புதிய சாதனை

தென் ஆப்ரிக்க நீச்சல் வீரர் சாட் லெ குளோஸ் 34, ஒட்டுமொத்த காமன்வெல்த் விளையாட்டில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இம்முறை ஒரு வெள்ளி, 2 வெண்கலம் பெற்ற இவர், ஒட்டுமொத்தமாக 21 பதக்கம் (7 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம்) கைப்பற்றினார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் 32, உள்ளார். இவர், 20 பதக்கம் (14 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) வென்றுள்ளார்.

Advertisement