மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதை கண்காணிக்க  வந்தாச்சு 'ஆப்'பு : மாநகராட்சியில் 'டிமிக்கி' அலுவலர்களுக்கு கமிஷனர் 'செக்'

மதுரை: மதுரை நகரில் 100 வார்டுகளிலும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகளை கண்காணிக்க மாநகராட்சி புதிய 'ஆப்' மை (செயலி) அறிமுகம் செய்துள்ளது.

மழைக் காலம் துவங்க உள்ளதால் மாநகராட்யில் 80 கி.மீ.,க்கு அமைந்துள்ள கால்வாய்களையும், மழைநீர் உபரி கால்வாய்களையும் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக வார்டு வாரியாக தினமும் சுத்தப்படுத்திய பணிகள் குறித்த விபரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவிட்டார்.

இதில் பல அறிக்கைகள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்காணிக்க 'எஸ்.டயுள்யூ.டி 'ஆப்'பை (செயலியை) கமிஷனர் அறிமுகம் செய்துள்ளார். இதன்படி சம்பந்தப்பட்ட வார்டுகளில் கால்வாயில் தினமும் எத்தனை மீட்டர் சுத்தம் செய்யப்பட்டது என்பது குறித்து 'ஸ்பாட்'டில் இருந்து 'ஜியோ டேக்' போட்டோக்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதுபோல் மக்களிடமிருந்து வார்டு வாரியாக வரப்பெற்ற மாநகராட்சி குறித்த புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் 'ஆப்' மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓரிரு மாதங்களில் மழைக்காலம் துவங்கும் என்பதால் மழைநீர் தேங்குவதை தடுக்க முன்கூட்டியே சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இதன்மூலம் மழைநீர் அருகே உள்ள கால்வாய், ஊருணி, கண்மாய்களில் சேர்ந்துவிடுவதால் பிரச்னை குறையும். இதற்காக 80 கி.மீ., துாரம் கொண்ட மழைநீர்க் கால்வாய், பிரதான மழை நீர் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகள் மீது கமிஷனர் அதிக கவனம் செலுத்துகிறார்.

இதற்காக சிமென்ட் வகை மழைநீர் கால்வாயை சுத்தம் செய்ய 'மினி எக்ஸ்கேவேட்டர்', பிரதான கால்வாய்களை சுத்தம் செய்ய 'ரோபோட்டிக் எக்ஸ்கேவேட்டர்' இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல வார்டுகளில் சுத்தம் செய்ததாக அலுவலர்கள் தவறான 'ரிப்போர்ட்' அளிக்கின்றனர். புதிய 'ஆப்' மூலம் கமிஷனரே கண்காணிக்க உள்ளதால் இனி தவறு நடக்க வாய்ப்பில்லை என்றனர்.

பச்சை நிறமே... பச்சை நிறமே...

கமிஷனர் முயற்சியால் மாநகராட்சி பகுதியை பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் ரவுண்டானா போல் நகரில் 9 ரவுண்டானாக்கள், 22 சென்டர் மீடியன்களை தனியார் ஸ்பான்சர் மூலம் பசுமையாக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது.

நகரை பசுமையாக்கும் வகையில் மாநகராட்சி காலியிடங்கள் உட்பட நகரில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நட்டப்படுகின்றன. ராஜாஜி சிறுவர் பூங்கா பகுதியில் புதிய மாநகராட்சி நர்சரியும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement