பேச்சு, பேட்டி, அறிக்கை
திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா பேச்சு:
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, என்னிடம் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். 'பொது மன்னிப்பு கேட்க வேண்டும்; இனி அவதுாறுகளைப் பரப்பக் கூடாது. இதை செய்யத் தவறினால் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்படும்' என, நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். வைகோவின் உயிரை மூன்று முறை காப்பாற்றியதற்கு, எனக்கு கொடுத்த பரிசாக இது இருக்கட்டும்.
அவரது குற்றச்சாட்டை சட்டரீதியாக சந்திக்கிறேன்.
வைகோ வக்கீலுக்கு படித்திருப்பதால், கோர்ட்டில் அவரே வாதாடி உங்களை உண்டு,
இல்லைன்னு பண்ணிடுவாரே!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை:
பா.ஜ., பக்கம் த.வெ.க., சாயாது. அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விஜய் அரசுக்கு ஆபத்து விளைவிக்க எவர் முயன்றாலும், அதை தடுக்கும் போர்வாளாக, கேடயமாக ம.தி.மு.க., இருக்கும். ராணுவம் வருவதற்கு முன், அங்கிருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் போர் பொறியாளர்கள் போல, விஜய் அரசுக்கு நாங்கள் துணை இருப்போம்.
இப்படித்தான், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில் இருந்தபோதும், 'அந்தக் கட்சிகளை காக்கும் கவசமாக இருப்பேன்'னு சொன்னீங்க... அதுபோல இதுவும் ஆகிடாதே!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேச்சு:
கடந்த 2018ல், தி.மு.க., தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, என்னை சந்திக்க வருவோர் பூங்கொத்து, சால்வைக்கு பதிலாக, புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட, 6 லட்சம் நுால்களை தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ள நுாலகங்களுக்கு அனுப்பி வைத் திருக்கிறேன்.
பாளையங்கோட்டை சிறை கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள நுாலகத்திற்கும், 5,000 புத்தகங்களை வழங்கியது மனநிறைவாக இருக்கிறது.
நீங்க முதல்வராக இருந்து, மக்களுக்கு செய்த சேவைகளை விட, மிகவும் சிறப்பான பணி இது!
தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான சிவசங்கர் பேட்டி:
காவிரி விவகாரத்தில், த.வெ.க., அரசு மீது அதன் கூட்டணி கட்சிகளே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. இப்போதும், த.வெ.க., அரசு கள்ள மவுனம் காக்கிறது. 'எல்லாவற்றுக்கும் அமைதியாக இருப்பதால், மக்கள் மத்தியில் பிரச்னை வெடிக்காது' என கருதுகின்றனர். ஆனால், அந்த அமைதியே ஒரு கட்டத்தில் அரசிற்கு எதிராக, மக்கள் மத்தியில் புரட்சியாக வெடிக்கும்.
'தி.மு.க., ஆட்சியே மீண்டும் நீடிக்கும்'னு நம்பிட்டு இருந்த உங்களுக்கு, அமைதி புரட்சி மூலம், மக்கள் சம்மட்டி அடி கொடுத்ததை மனசுல வச்சு இதை சொல்றீங்களோ?