'இப்படி முறுக்கிட்டு நிற்கணுமா?'
திருப்பத்துார் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலர் பசுபதி தலைமையில், வாணியம்பாடியில் சமீபத்தில் நடந்தது. ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 'வீரமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பிய, மாதனுார் ஒன்றியச் செயலர் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவர் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என, வீரமணி ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதன்பின், கூட்டம் தொடங்கியது. திடீரென எழுந்த வீரமணி, 'மாதனுார் ஒன்றியச் செயலர் நேரில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை, கட்சியின் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்' எனக் கூறி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதைப் பார்த்த தொண்டர் ஒருவர், 'ஏற்கனவே கட்சி கஷ்ட காலத்தில் இருக்கு... இந்த நேரத்தில் இப்படி முறுக்கிட்டு நிற்கணுமா?' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.