சிந்து நதிநீர் ஒப்பந்தம் சிதைய பாகிஸ்தானே காரணம்: இந்திய துாதர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: ''நல் லெண்ணம், நட்புறவின் அடிப்படையில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, சிதைப்பதற்கான முயற்சிகளையே கடந்த 50 ஆண்டு காலமாக பாகிஸ்தான் மேற்கொண்டது,'' என, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 1960ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிந்து நதியின் மொத்த நீரில் 20 சதவீதத்தை மட்டுமே கொண்டு செல்லும் ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று நதிகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவும், அதேசமயம், 80 சதவீத நீரை கொண்டு செல்லும் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் உரிமைகளை பாகிஸ்தானும் பிரித்து கொண்டன. இந்த சமத்துவமில்லா பங்கீடு பல ஆண்டுகளாக தேசத்தின் வளர்ச்சியை பாதித்த போதிலும், இந்தியா தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை கடைப்பிடித்தது.
ஆனால், இதற்கு பிரதிபலனாக 1965, 1971 மற்றும் 1999ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான போர்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என கடந்த 50 ஆண்டு காலமாக நட்புறவை சிதைக்கும் வேலைகளில் தான் பாகிஸ்தான் ஈடுபட்டது.
கடந்த, 2001ல் இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல், 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதல், 2016ல் உரி மற்றும் பதான்கோட் தாக்குதல்கள், 2019ல் புல்வாமா தாக்குதல் மற்றும் 2025ல் பஹல்காம் தாக்குதல் இதில் அடங்கும்.
இ ரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண பாகிஸ்தான் உண்மையாகவே விரும்பினால், முதலில், தன் நாட்டில் உ ருவாக்கி வைத்துள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை முற்றிலும் அழிக்க வேண்டும். பரஸ்பர உறவை வலுப்படுத்த இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் செயல்பாடுகளே தடையாக இருக்கின்றன.
பாகிஸ்தானின் தற் போதைய தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு, அந்நாட்டு அரசே காரணம். இந்தியா மீது பழி சுமத்தி மாநாடுகளை நடத்துவதற்கு பதிலாக, தங்களது நீர்வள மேலாண்மையை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் கவ னம் செலுத்த வேண்டும் . இவ்வாறு அதில் கூறியுள்ளார்.