மீனாட்சிபுரத்தில் குறைந்தழுத்த மின்சப்ளை  வீடுகளில் கருகும் எலக்ட்ரானிக் பொருள்  

சிவகங்கை: சிவகங்கை அருகே மீனாட்சிபுரத்தில் குறைந்தழுத்த மின் சப்ளையால் வீடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமாகி வருவதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கின்றனர். சிவகங்கை அருகே முடிகண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தில் 500 வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 2 ஆழ்துழாய் கிணறு, மேல்நிலை தொட்டி அமைத்துள்ளனர்.

அதே போன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டமும் உள்ளது. மீனாட்சிபுரம் மக்கள் தினமும் குளிக்க 3 இடங்களில் ஆழ்துழாய் கிணறு அமைத்து தொட்டிகளில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்புகின்றனர். இது தவிர 15 க்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இவை அனைத்திற்குமான மின் தேவைக்கு மீனாட்சிபுரம் நுழைவு வாயிலில் உள்ள ஒரே ஒரு மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து மட்டுமே மின்சப்ளை செய்கின்றனர். இதனால் போதிய டிரான்ஸ்பார்மர் இன்றி குறைந்தழுத்த மின்சப்ளையே இரவு, பகலாக நீடித்து வருகிறது. இதனால் வீட்டில் மக்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமாகின்றன. ஊராட்சி சார்பில் அமைத்த குடிநீர் திட்ட மின்மோட்டார்களும் அடிக்கடி பழுதாவதால், குடிநீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவிக்கின்றனர். எனவே மீனாட்சிபுரத்தில் வளர்ந்து வரும் வீடுகளுக்கு ஏற்ப கூடுதல் மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையின்றி மின்சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ///

Advertisement