இந்தியாவுக்கு 22 பதக்கம் * பாரா பாட்மின்டனில்...
புதுடில்லி: பாரா பாட்மின்டனில் இந்தியா 9 தங்கம் உட்பட 22 பதக்கம் கைப்பற்றியது.
பிரேசிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. மொத்தம் 20 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் 'எஸ்.எச் 6' பிரிவு பைனலில் இந்தியாவின் மணிஷா, 21-9, 21-16 என பிரேசிலின் மரியாவை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார்.
கலப்பு இரட்டையர் ('எஸ்.எச் 6') பைனலில் இந்தியாவின் மணிஷா, பிரேம் சந்த் ஜோடி 21-12, 21-11 என ஜெர்மனியின் ராபின், ஜூலியா ஜோடியை வென்று தங்கம் வசப்படுத்தியது. பெண்கள் இரட்டையரில் ('எஸ்.எச் 6') மணிஷா, பெருவின் ஆன்ரியா ஜோடி, 21-16, 21-13 என பிரேசிலின் ஜூலியா, மரியா ஜோடியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.
* ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எச் 6' பிரிவு பைனலில், இந்தியாவின் பிரேம், சக வீரர் குல்தீப்பை 21-17, 22-20 என சாய்த்து தங்கம் வசப்படுத்தினார். ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல் 3' பிரிவில் இந்தியாவின் விஜேந்தர், சக வீரர் ஹர்ஷை 21-17, 23-21 என போராடி வென்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் இரட்டையரில் ஆர்யன், பிரி தாகர் (எஸ்.எல் 3, எஸ்.யு 5) ஜோடி தங்கம் வென்றது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 22 பதக்கம் கிடைத்தன.