ஆஹா ஆமதாபாத்: 2030ல் 'நுாற்றாண்டு' காமன்வெல்த் திருவிழா

கிளாஸ்கோ: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் வண்ணமயாக நிறைவு பெற்றது. அடுத்த போட்டி, 2030ல் ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.


ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23வது காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இந்தியா உட்பட 74 நாடுகளை சேர்ந்த, 2800 தடகள நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 11 நாள் நடந்த இப்போட்டி, நேற்று நிறைவு பெற்றது.

'தி ஒ.வி.ஒ., ஹைட்ரோ' உள்ளரங்கு மைதானத்தில் நிறைவு விழா நடந்தது. அணிவகுப்பில், இந்திய மூவர்ணக்கொடியை குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் ஏந்தி வந்தார். அடுத்த போட்டி நடக்க உள்ள ஆமதாபாத் வசம், 'கிங்ஸ் பேடன்', கொடி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 1930ல் கனடாவின் ஹாமில்டனில் முதல் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. நுாற்றாண்டு திருவிழாவாக குஜராத்தின் ஆமதாபாத்தில் 24வது போட்டி நடக்க இருப்பது சிறப்பு. காமன்வெல்த் கொடியை இந்திய ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா முதலில் பெற்றார். அதை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவிடம் வழங்கினார். இறுதியில் குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியிடம் முறைப்படி கொடி ஒப்படைக்கப்பட்டது.


இளவரசர் அழைப்பு: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசிற்கு பதிலாக பங்கேற்ற எடின்பர்க் இளவரசர் எட்வர்ட், போட்டி நிறைவு பெற்றதாக அறிவித்தார். இவர் பேசுகையில்,''போட்டியை சிறப்பாக நடத்திய கிளாஸ்கோவுக்கு நன்றி. நுாற்றாண்டு விழாவாக அமையவுள்ள 24-வது காமன்வெல்த் போட்டியை கொண்டாட, 2030ல் ஆமதாபாத்திற்கு வரும்படி அனைத்து தடகள நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்,''என்றார்.

மின்னிய மனுஷி சில்லார்: இதற்கு பின் இந்திய கலாசாரத்தை போற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 'வசுதைவ குடும்பம்' என்ற தலைப்பில் 'உலகம் ஒரே குடும்பம்' என்பதை வலியுறுத்தும் வகையில் காட்சிகள் நகர்ந்தன. இவை காமன்வெலத் நாடுகளின் ஒற்றுமை, நட்பை பிரதிபலித்தன. 'வந்தே மாதரம்' பாடல், நடிகை மனுஷி சில்லாரின் துள்ளல் நடனம், இந்திய பாரம்பரிய நடன குழுவினரின் ஆட்டம் ரசிகர்களை கவர்ந்தது. ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து பாடகர்களும் கலக்கினர். அடுத்த போட்டி நடக்க உள்ள ஆமதாபாத் நகரின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் சிறப்பு படம் காண்பிக்கப்பட்டது.

இந்திய சிதார் இசை கலைஞர் ரிஷாப் சர்மா, ஸ்காட்லாந்தின் 'பைப்' இசை மன்னன் ராஸ் எய்ன்ஸ்லி இணைந்து அசத்தினர். இறுதியில் பாடகர் சங்கர் மகாதேவன், அவரது மகன்கள் சித்தார்த், ஷிவம், குஜராத் பாடகி பூமி திரிவேதியின் பாடல்களால் அரங்கம் அதிர்ந்தது. கண்கவர் வாணவேடிக்கையுடன், விழா இனிதே நிறைவு பெற்றது.

Advertisement