திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் மோதல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

நத்தம்: டி.என்.பி.எல்., கிரிக்கெட் லீக் போட்டியில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதுகின்றன.

தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில், 2016 முதல் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 9 சீசன் முடிந்துள்ளன. இதில் சேப்பாக்கம் அணி, அதிகபட்சமாக 4 முறை (2017, 2019, 2021, 2022) சாம்பியன் பட்டம் வென்றது. கோவை 2 (2022, 2023), துாத்துக்குடி (2016), மதுரை (2018), திண்டுக்கல் (2024), திருப்பூர் (2025) தலா ஒரு முறை கோப்பை கைப்பற்றின.

டி.என்.பி.எல்., 10வது சீசன் ஆக. 4ல் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு கட்டமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. முதற்கட்ட போட்டிகள், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் இன்று முதல் ஆக. 15 வரை நடக்கவுள்ளன. இதில் 20 லீக் போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
இரண்டாம் கட்ட போட்டிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளன. இதில், ஆக. 18 முதல் 22 வரை 8 லீக் போட்டிகள் நடக்கவுள்ளன. ஆக. 23, 24, 26ல் 'பிளே-ஆப்' சுற்றுக்கான தகுதிச் சுற்று-1, 'எலிமினேட்டர்', தகுதிச் சுற்று-2 போட்டிகள் நடத்தப்படுகிறது. பைனல், ஆக. 28ல் நடக்கும். தவிர, 11 நாட்கள் தலா 2 போட்டியும், 10 நாட்கள் தலா ஒரு போட்டி நடத்தப்படும்.


நத்தத்தில் நடக்கும் முதல் லீக் போட்டியில் (ஆக. 4) 'நடப்பு சாம்பியன்' திருப்பூர் அணி, திண்டுக்கல் அணியை சந்திக்கிறது.

Advertisement