பேஸ்புக்கில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா நிறுவனத்துக்கு பார்லி குழு கிடுக்கிப்பிடி


புதுடில்லி: பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பார்லிமென்ட் குழு உறுப்பினிர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளனர். அந்த வீடியோவை நீக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கம் கேட்டுள்ளனர்.


சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் ஒழுங்குமுறை மற்றும் பயனர் தனியுரிமை குறித்து விவாதிக்க கூகுள், மெட்டா, எக்ஸ் மற்றும் ஸ்நாப் சாட் சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று [ ஆகஸ்ட் 03 ] டில்லியில் நடந்தது. பார்லிமென்ட் நிலைக்குழு முன்பு அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.


இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்டது குறித்து பார்லிமென்ட் நிலைக்குழு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கடுமையான கேள்விகளை எம்பிக்கள் எழுப்பினர்.


பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீக்கப்பட்டதாக விளக்கம் அளித்தனர்.


இதனை ஏற்க மறுத்த குழுவினர், மன்னிப்பு கேட்பது பிரச்னை அல்ல. இதற்கு யார் பொறுப்பு என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரவித்தனர். இந்த வீடியோ நீக்கப்பட்டதற்கு காரணமான மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


மெட்டா தளத்தில் ஆட்சேபனைக்குரிய மற்றும் சர்ச்சைக்குரிய தகவல்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement