வெங்காயம், வாழைக்கு பயிர் காப்பீடு திட்டம்

பொங்கலுார்:வெங்காயம், வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என, பொங்கலுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சித்ரா பானு தெரிவித்துள்ளார்.

பொங்கலுார், தெற்கு-அவிநாசிபாளையம் பிர்க்காவில் சின்ன வெங்காயம் மற்றும் பொங்கலுார் பிர்க்காவில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், குத்தகை விவசாயிகள் உள்ளிட்டோர் விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் சேரலாம்.

சின்ன வெங்காயத்துக்கு ஏக்கருக்கு 2,262 ரூபாய்; வாழைக்கு 4,984 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். முழுமையான சேதம் ஏற்பட்டால், வெங்காயத்துக்கு ஏக்கருக்கு 45,250 ரூபாய்; வாழைக்கு 99,689 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து காப்பீடு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

பயிர் சேதம் ஏற்பட்டால், 72 மணி நேரத்துக்குள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா எண் 1800 209 5959, வி.ஏ.ஓ., மற்றும் வட்டார தோட்டக்கலை அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தோட்டக்கலை, வருவாய்த் துறை மற்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்த பிறகு இழப்பீடு வழங்கப்படும்.



மேலும் விவரங்களுக்கு பொங்கலுார் வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம்.

Advertisement