உறுதியுடன் செயல்பட்டால் வழக்கு விசாரணை விரைவில் முடியும்: தலைமை நீதிபதி

1


புதுடில்லி: விசாரணை விரைவுபடுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், அது வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.


ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களைத் திறந்துவைத்த பிறகு,சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது: ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் இன்று 16 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம், வழக்குகளை அன்றாடம் விசாரணைக்கு எடுத்து கொள்வதையும், விசாரணைகளை தடையின்றி தொடர்ந்து நடத்துவதையும் உறுதி செய்வதாகும்.


வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன் நீதித்துறை அதிகாரிகள் உண்மையான முயற்சி மேற்கொண்டால், முக்கியமான மற்றும் பெரிய வழக்குகளைக் கூட ஓராண்டுக்குள் முடித்துவிட முடியும் என்று முழுமையாக நம்புகிறேன். இது நமது நீதி மற்றும் சட்ட அமைப்பில் ஒரு முக்கிய வரலாற்றுச் சாதனையாக அமையும்.


விசாரணையை விரைவுபடுத்துதல் மற்றும் அன்றாடம் நடத்துதல் என்ற நோக்கத்தை அடைவதற்கு, நீதித்துறை அதிகாரிகள், நீதிமன்றம் மற்றும் தலைமை அதிகாரி உள்ளிட்டோரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைப்பது அவசியம். இல்லையெனில் அந்த நோக்கமே தோல்வி அயடையக்கூடும்.


குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படும் அர்ப்பணிப்புள்ள அதிகாரியாக அவர் இருக்க வேண்டும். அதேபோல, மின்னணுச் சான்றுகள், ஆவணச் சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள் மற்றும் தடயவியல் சான்றுகளைச் சரியான நேரத்தில் சமர்ப்பித்தலும் முக்கியமானது. முக்கிய வழக்குகளில் இவை அனைத்தும் மிக முக்கியமானவை.


விசாரணைச் செயல்பாட்டில் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. நீதிமன்றத்தைப் பராமரித்தல், ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் இதர பணிகளால் நீதிபதியின் நேரம் வீணாகாமல் பார்த்து கொள்வது போன்றவற்றில் பெரும்பாலும் நீதிமன்றப் பணியாளர்களையே சார்ந்திருக்கின்றன. விசாரணை விரைவுபடுத்தப்பட்டு ஓராண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற உறுதியுடன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், அது வெறும் கனவாக இல்லாமல் நிஜமாக மாறும் .
இவ்வாறு சூர்யகாந்த் கூறினார்.

Advertisement