பள்ளிகளில் அரசியல் கோஷம்; மவுனம் காக்கும் அதிகாரிகள்

15

சென்னை: தமிழகத்தில் த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், அரசு பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி, த.வெ.க.வினர் 'ரீல்ஸ்'கள் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, பள்ளி வளாகங்களில், கல்விசார் செயல்பாடுகளை தவிர்த்து, அரசியல் நிகழ்வுகள் கூடாது என, பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

எனினும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும், அரசியல் சார்ந்த நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தமிழக கனிம வளத்துறை அமைச்சர் பிரபு, காரைக்குடியில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மாணவ, மாணவியர் அனைவரும், 'டி.வி.கே., டி.வி.கே.,' என, கோஷமிடும்போது, அவர் நடுவில் நின்று ரசிக்கும் வீடியோ வெளியானது. இதற்கு, பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி வளாகங்களில், அரசியல் சார்ந்த செயல்பாடுகள் இருக்க கூடாது என, எச்சரித்த பின்பும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன.

இது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், மவுனம் காப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement