திமுக ஆட்சியில் நடந்த குவாரி முறைகேடுகள்; விபரங்களை திரட்டுகிறது கனிமவளத்துறை

2

சென்னை: தமிழகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில், அமலாக்கத்துறை கண்டு பிடித்த, 4,736 கோடி ரூபாய் மணல் குவாரி முறைகேடுகள் குறித்த விபரங்களை, கனிமவளத்துறை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.

தமிழகத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில், 23 இடங்களில், ஆற்று மணல் குவாரிகள் செயல்பட்டன. இந்த குவாரி களில் இருந்து, யார்டுகளுக்கு மணல் அள்ளிப்போடுவதில், நான்கு பேர் ஒப்பந்ததாரர்களாக இருந்தனர்.

எதிர்ப்பு



இதில், அனுமதிக்கப்பட்டதை விட, அதிக அளவில் மணல் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து அமலாக்கத்துறை, 2023ல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது.

இதற்காக குவாரிகளில், 'ட்ரோன்கள்' பயன்படுத்தி ஆய்வு செய்ததில், அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட மணல் அளவு, அரசுக்கு கிடைத்த வருவாய் இடையே, அதிக வேறுபாடு இருந்தது தெரிய வந்தது.

அந்த வகையில், 4,736 கோடி ரூபாய் அளவுக்கு, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்தது.

இது தொடர்பாக, வேலுார், கரூர், தஞ்சாவூர், அரியலுார் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர்களுக்கு, அமலாக்கத்துறை 'நோட்டீஸ்' அனுப்பியது. இதற்கு அப்போதைய தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

'மணல் குவாரி முறைகேடுகளை, நாங்களே விசாரிப்போம்' என, தமிழக அரசு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்தது.

கவனம்



ஆனால், கடந்த ஆட்சியில், இது தொடர்பாக எந்த விசாரணையும் நடக்கவில்லை. இதனால், மணல் குவாரி முறைகேடுகள், கிடப்பில் போடப்பட்டன.

தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய அரசு, கனிம வளத்துறையிலும், குவாரிகளிலும் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

இது குறித்து, கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில், மணல் குவாரி முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கையை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஆர்வம்



இதனால், சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடப்பட்டன. புதிதாக குவாரிகள் திறக்க, கடந்த ஆட்சியில் முடிவு செய்த போதும், ஒப்பந்ததாரர்கள் பிரச்னையால் பணிகள் முடங்கின.

தற்போதைய தமிழக அரசு, மணல் குவாரிகளில், கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன, அதில் எந்த அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளலாம் என்பது குறித்த கோப்புகள், அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை தொடர் பான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement