41 கல் குவாரி அதிபர்கள் அரசுக்கு ரூ.9.28 கோடி பாக்கி: ஆர்.டி.ஐ., தகவலில் அதிகாரி மழுப்பல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்ட 41 கல் குவாரி அதிபர்களிடம் இருந்து அரசுக்கு வர வேண்டிய ரூ.9 கோடியே 28 லட்சம் பாக்கி குறித்து தகவல் தெரிவிக்காமல், கனிமவளத்துறை உதவி இயக்குனர் மழுப்பலான பதில் அளித்துள்ளார்.


திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்ட 41 கல் குவாரிகளில் விதிமீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி கனிமவளத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆய்வில், அரசுக்கு ரூ.11 கோடியே 53 லட்சத்து 11 ஆயிரத்து 788 வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணக்கிட்டு, அந்த தொகையை சம்பந்தப்பட்ட குவாரி அதிபர்களிடம் இருந்து வசூலிக்க பரிந்துரைத்தனர்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் எஸ்.பி. முத்துராமன், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்தார். அதற்கு பதிலளித்த திருநெல்வேலி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், இதுவரை ரூ.2 கோடியே 24 லட்சத்து 58 ஆயிரத்து 567 மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், மீதமுள்ள ரூ.9 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரத்து 221 யாரிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டும், எவ்வளவு தொகை இன்னும் பாக்கியாக உள்ளது, அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து எஸ்.பி. முத்துராமன் கூறுகையில், ஆர்.டி.ஐ. மனுவுக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன். அரசுக்கு வர வேண்டிய ரூ.9.28 கோடி வருவாயை சம்பந்தப்பட்ட கல் குவாரி அதிபர்களிடம் இருந்து உடனடியாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement