தவறவிட்டு சென்ற ரூ.25 ஆயிரம் வாட்ச் கடைக்காரரின் நேர்மை

திருப்பூர், ஆக. 6–

திருப்பூரில் தவறவிட்டு சென்ற 25 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருந்த பர்ஸை, உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசில் ஒப்படைத்த வாட்ச் கடைக்காரரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி பாராட்டினார்.

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் வாட்ச் கடை நடத்தி வரும் வெங்கடேஷ், 40, நேற்று அங்கு கிடந்த ஒரு பர்ஸை கண்டெடுத்தார். அதில் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், அடையாள ஆவணங்களும் இருந்தன. உடனடியாக அதை திருப்பூர் தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், பர்ஸ் தர்மபுரியைச் சேர்ந்த அஜீத், 29 என்பவருடையது என்பது தெரியவந்தது. கோவையில் அகழ்வு இயந்திர டிரைவராகபணியாற்றும் அவர், சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் திருப்பூரில் உள்ள உறவினரைச் சந்திக்க வந்தபோது பர்ஸை தவறவிட்டிருந்தார்.

அஜீத்தை வரவழைத்து, உரிய ஆவணங்களை சரிபார்த்த போலீசார், பணத்துடன் பர்ஸை அவரிடம் ஒப்படைத்தனர்.

நேர்மையுடன் செயல்பட்ட வாட்ச் கடைக்காரர் வெங்கடேஷை, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி நேரில் அழைத்து பாராட்டினார்.

–––

மத்திய பஸ் நிலையத்தில் கண்டெடுத்த 25 ஆயிரம் ரூபாயை, நேர்மையாக ஒப்படைத்த வெங்கடேஷூக்கு சால்வை அணிவித்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி பாராட்டினார். 

Advertisement