கிராம அம்மன் கோயில்களில் சேவையாற்றும் அம்மாடிகள்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் சித்திரை மாதம் முதல் தொடர்ந்து முளைப்பாரி உற்ஸவம் மற்றும் பூக்குழி உற்ஸவங்கள் நடந்து வருகிறது.
ஆடி மாதம் அம்மன் கோயில்களில் பூஜை முறைகளை கையாளவும், முளைப்பாரி மற்றும் பூக்குழி உற்ஸவம் இவற்றிற்கு அதிக பங்களிப்பு தரும் வகையிலும் சொல் வழக்கில் உள்ள (அம்மாடிகள்) பூஜாரிகள் உள்ளனர். கிராம மக்கள் கூறியதாவது:
பத்திரகாளியம்மன், முத்துமாரியம்மன், மாரியம்மன், காந்தாரியம்மன், கூனியம்மன் உள்ளிட்ட சக்தி மிக்க அம்மன் கோயில்களில் ஆன்மிக சேவையாற்றுவதில் பூஜாரிகள் எனப்படும் அம்மாடிகளின் பங்களிப்பு அளப்பரியது. உற்ஸவ காலங்களில் தனியாக விரதம் இருந்து கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். முளைப்பாரி வளர்த்தலிலும், அம்மன் சக்தி கரகம் கிராமங்கள் சுற்றி வருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பூக்குழி வளர்த்தலில் இவர்களின் ஆலோசனைப்படி செய்யப்படுகிறது. கரகம் எடுப்பதற்காக அசைவ உணவை தவிர்த்து துாய்மையாக இருந்து விரதம் இருக்கின்றனர். செம்பில் வேப்பிலை, பூக்கள் வைத்து அம்மனாக பாவித்து அலங்கரிக்கின்றனர். முளைப்பாரி உற்ஸவ காலங்களிலும், மார்கழி மாதங்களிலும் அம்மாடிகளின் சேவைகள் கிராமங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றனர்.
––