உளுந்துார்பேட்டை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியில் மெத்தனம்:விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை புதிய பஸ் நிலையத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை, சேலம், மதுரை, திருச்சி, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப்பகுதியாக உளுந்துார்பேட்டை இருந்து வருகிறது. இதனால் இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் மையமாக உள்ளது.
வாகன போக்குவரத்து அதிகரிப்புக்கு ஏற்ப போக்குவரத்து பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து மிகுந்த உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்லதற்கு போதிய இட வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு இடையே பஸ் நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதனால், உளுந்துார்பேட்டையில் மாற்று இடத்தில் புதிய பஸ் நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது அப்போது எம்.எல்.ஏ.,வாக இருந்த குமரகுரு, அஜீஸ் நகர் அருகே புதிய பஸ் நிலையம் கொண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டார். அதன் பின் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் அஜீஸ் நகர் அருகே பஸ் நிலையம் அமைப்பதற்கான திட்டம் கைவிடப்பட்டு, கந்தசாமிபுரம், ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி அருகே புதிய பஸ் நிலையம் கொண்டு வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உளுந்துார்பேட்டையில் புதிய பஸ் நிலையம் கொண்டு வரப்படும் என கடந்த 2023-2024ம் ஆண்டில் நடந்த சட்டசபை கூட்டத்தில் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியின் பின்புறம் 6.12 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டது. புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு 16.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய பஸ் நிலையத்தில் 47 கடைகள், புறக்காவல் நிலையம், போக்குவரத்து பணி மனைக்கான டைமிங் அலுவலகம் என பல்வேறு வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
மேலும். உளுந்துார்பேட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விருத்தாசலம் சாலை சந்திப்பு வழியாக சர்வீஸ் சாலை அமைத்து புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பஸ் நிலைய கட்டுமானப் பணிகளில் குறைந்த அளவே பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதால் பணிகளும் ஆமை வேகத்திலேயே நடந்து வருகிறது.
இதனால் உளுந்துார்பேட்டை புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு எப்போது வாகன போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையத்தை விரைந்து கட்டி முடித்து போக்குவரத்து பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.