மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்

13


வாஷிங்டன்: ஈரானில் மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

லாஸ் வேகாஸில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: ராணுவ நடவடிக்கைகள் மூலம் அமெரிக்கா ஈரானை பலவீனப்படுத்தியுள்ளது. ஆனாலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறது. வெனிசுலாவில் செய்ததையே ஈரானிலும் அமெரிக்கா செய்து வருகிறது.

ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதையே அமெரிக்கா விரும்புகிறது. ஈரானில் மக்களைக் கொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்நாடு அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்காது. நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கி வருகிறோம்.

மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை ஒன்று திட்டமிடப்பட்டிருந்தது; ஆனால் ஈரான் பேச்சுவார்த்தை கோரியதை அடுத்து அது நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கவிருந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருந்தோம், அப்போது அவர்கள் என்னை அழைத்து, தயவுசெய்து அதைச் செய்யாதீர்கள்.

நாம் பேசலாம் என்றார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் நம்மை மதிக்கிறார்கள். ஈரானுடன் நீண்ட காலத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்திருக்க வேண்டியதை வேறு எந்த அதிபரும் செய்யவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அமெரிக்காவைக் குறிப்பிடும் வகையில் சில தரப்பினர் இந்த முயற்சிக்கு தடையாக இருக்காவிட்டால் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.

Advertisement