இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி: இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

புதுடில்லியில் நடந்த ஆப்ரிக்கா தின விழாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: உலக முன்னேற்றத்திற்கு இந்தியாவும், ஆப்ரிக்காவும் வலிமையான சக்திகள். ஆப்ரிக்கா இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளி.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஆப்ரிக்காவிற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஆப்ரிக்காவிற்கான நிரந்தர இடத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

இந்தியா, ஆப்ரிக்கா இடையே இரு தரப்பு வர்த்தகம் கடந்த ஆண்டு 93 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.இந்தியாவில் இருந்து ஆப்ரிக்காவில் செய்யப்பட்ட ஒட்டுமொத்த முதலீடு 80 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.

தகவல் தொடர்பு, எரிசக்தி, மருந்து தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற பல துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கும், திறமைகளுக்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement