குமாரசாமி - ஐ.பி.எஸ்., சந்திரசேகர் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வி
பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமி - ஐ.பி.எஸ்., அதிகாரி சந்திரசேகர் இடையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, கடந்த 2007 ல் கர்நாடக முதல்வராக இருந்த போது, பல்லாரியில் உள்ள சாய் மினரல்ஸ் நிறுவனத்திற்கு, விதிகளை மீறி சுரங்க ஒப்பந்தம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, லோக் ஆயுக்தா விசாரிக்கிறது.
குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்டு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர், கடந்த 2024ம் ஆண்டு கடிதம் எழுதினார். இந்த கடிதம் கசிந்த நிலையில், கவர்னர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரிக்க அனுமதி கேட்டு, சந்திரசேகர் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சந்திரசேகரை பிளாக்மெயிலர், ஊழல்வாதி என்று குமாரசாமி விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக குமாரசாமி, அவரது மகன் நிகில், எம்.எல்.ஏ., சுரேஷ் பாபு ஆகியோர் தன்னை மிரட்டியதாக சந்திரசேகர் அளித்த புகாரில் சஞ்சய்நகர் போலீசார் குமாரசாமி உட்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி குமாரசாமி உட்பட மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இம்மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, வழக்கை சமரசத்தின் மூலம் தீர்க்கும்படி குமாரசாமி, சந்திரசேகருக்கு அறிவுறுத்தினார். இருவரும் ஒப்பு கொண்ட நிலையில், மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் சீனிவாஸ் ஒகா நியமிக்கப்பட்டு இருந்தார்.
இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சந்திரசேகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது தரப்பு வக்கீல் கேட்டு கொண்டார். இதை குமாரசாமி தரப்பு ஏற்க மறுத்த நிலையில், சமரசம் தோல்வியில் முடிந்தது நேற்று தெரியவந்தது.
இதனால் குமாரசாமி தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி விசாரணை நடக்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது