போதைப் பொருள் ஒழிப்பு: தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் 'போதையில்லா தமிழகம்' தலைப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாக பூங்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு, எஸ்.பி., மதிவாணன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், டி.ஐ.ஜி., அருளரசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிடும் வகையில், தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'போதைப் பொருளுக்கு இல்லை என்று சொல்வோம்; வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தேர்ந்தெடுப்போம்' என்ற தலைப்பில், கலெக்டர், டி.ஐ.ஜி., தலைமையில் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் சார்பில், மல்லர் கம்பம் சாகசம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சியும், ஓவியப் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில், டாக்டர்கள் வசந்த், தேவசேனா ஆகியோர் ஊட்டச்சத்து மற்றும் மனநல மருத்துவர்களின் ஆலோசனை வழங்கினர்.
பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், ஏ.டி.எஸ்.பி., இளமுருகன், சோமசுந்தரம், ஞானவேல், சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர்கள் வசந்த், நேவிஸ் அந்தோணிரோசி மற்றும் போலீசார், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.