எதிர்கட்சிகள் திட்டமிட்டு பொய்களை பரப்புகின்றனர்: கட்சி நிர்வாகிகள் மத்தியில் அமித்ஷா பரபரப்பு பேச்சு
புதுச்சேரி: எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதி கலர்ஸ் விருதியை வழங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து ஓட்டல் அக்கார்ட்டில் தங்கினார்.அங்கு கட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜசேகரன், எம்.எல்.ஏக்கள் மீனாட்சி சுந்தரம் உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு நேர்மையான வெளிப்படையான ஆட்சியை தந்து வருகின்றனர். இந்தியாவின் பெயரை உலக அளவில் பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். ஆனால் கரப்பான்பூச்சிகள், எதிர்கட்சிகள் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை செய்து விஷமத்தை கொட்டி வருகின்றன.
நீட் வினாத்தாள் கசிவு நடந்ததும் உடனடியாக மத்திய அரசு களத்தில் இறங்கியது. குற்றவாளிகள் அனைவரையும் உள்ளே தள்ளியது. பார்லிமெண்ட் கடுமையான சட்டங்களை இயற்றியது. ஆனால் நீட் விவகாரத்தில் , ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜ., மீது எதிர்கட்சிகள் பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. திட்டமிட்டு பொய் பிரசாரத்தை எதிர்கட்சிகள் பரப்புகின்றன. இந்த பொய் பிரசாரத்திற்கு பா.ஜ., தொண்டர்கள் பதிலடி கொடுத்து மக்கள் மன்றத்தில் உண்மை சொல்ல வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார். .
சபாநாயகர் கேட்கும் பா.ஜ.,
அமித்ஷா தீவிர ஆலோசனை
புதுச்சேரியில் அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு இழுபறி முடிவுக்கு வந்த சூழ்நிலையில் சபாநாயகர் தேர்வு இன்னும் இறுதியாகவில்லை. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறும்போது, பா.ஜ., சேர்ந்த எம்.எல்.ஏ.,வுக்கு சபாநாயகர் பதவி வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.