காஜியாபாதில் ரூ. 6 லட்சம் மதிப்பு மொபைல் போன்கள் கொள்ளை
காஜியாபாத்:உத்தர பிரதேசத்தில் இரு குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுப்பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, அருகே உள்ள கடையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள், 20000 ரூபாய் உட்பட பிற உபகரணங்களை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்தவர் ஹாஜி ஷாமி. இவர், அங்குள்ள நுார் மசூதி வளாகத்தில் இருக்கும் சந்தையில், மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இரவு 10:00 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை திரும்பி வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, தன் கடையில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள், 20,000 ரூபாய் உள்ளிட்டவை திருடப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, நேற்று முன்தினம் அப்பகுதியில் திருடன் ஒருவர், மொபைல் போன் கடைக்குள் சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, 400 மீட்டர் தொலைவில் காசியாபாத் போலீசார், இரு குற்றவாளிகளை என்கவுன்டர் செய்து பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சந்தர்பத்தை பயன்படுத்தி, அக்கடைக்குள் புகுந்து திருடன் கொள்ளையடித்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.