சவடு மண் அள்ள ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பரமக்குடி கோட்டாட்சியர் கைது; முகாம் அலுவலகத்தில் ரூ.5.52 லட்சம் பறிமுதல்

24



நமது நிருபர்




ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சவடு மண் அள்ள ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), சரவணப்பெருமாள் 52, உடந்தையாக இருந்த டிரைவர் சுந்தர் 41, ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோட்டாட்சியரின் முகாம் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.5.52 லட்சத்தையும் கைப்பற்றினர்.

பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கண்மாய்களில் சவடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) சரவணபெருமாள், குறிப்பிட்ட கண்மாயில் சவடுமண் அள்ள அனுமதி கேட்ட ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை அந்த நபர் கொண்டு சென்றார். நேற்று விடுமுறை என்பதால் ஓட்டப்பாலம் அருகில் உள்ள ஆர்.டி.ஓ., முகாம் அலுவலகத்திற்கு வருமாறு ஆர்.டி.ஓ., அந்த நபரிடம் கூறியுள்ளார்.

டிரைவரும் கைது



அதன்படி அங்கு சென்ற அந்த நபரிடமிருந்து ஆர்.டி.ஓ., சரவணபெருமாள் ரூ.50 ஆயிரம் பெற்றார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். ஆர்.டி.ஓ., லஞ்சம் பெற அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் சுந்தரும் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து போலீசார் முகாம் அலுவலகத்தை சோதனையிட்ட போது கணக்கில் வராத ரூ.5.52 லட்சம், முக்கிய பல ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும் ஆர்.டி.ஓ.,வின் மதுரையில் உள்ள வீட்டிலும், டிரைவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து இருவரிடம் போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். கோட்டாட்சியரே லஞ்சம் பெற்று கைதானது வருவாய்த்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement