அன்று மட்டை வாங்க வசதி இல்லை இன்று தமிழக ஹாக்கி அணி வீரர் சுபாஷ்... சபாஷ்
ஸ்கூலுக்குப் போகும்போது ஹாக்கி மீது ஆசை வந்தது. ஆனால் ஒரு ஹாக்கி மட்டை வாங்கக்கூட வீட்டில் வசதி இல்லை. 'எங்களால் முடிஞ்சது இதுதான்... நீ நல்லா விளையாடு' என்று கூலி வேலைக்குச் செல்லும் அப்பா, அம்மா என்னை ஊக்கப்படுத்தினார்கள். அந்த வார்த்தைகளை நான் மறக்கவே முடியாது...
கண்கள் நனையச் சொல்கிறார் தமிழக ஹாக்கி வீரர் சுபாஷ்.
உடுமலை அருகே பெதப்பம்பட்டியைச் சேர்ந்த சுபாஷின் பெற்றோர் மணிகண்டன், மனோன்மணி - இருவரும் கூலித் தொழிலாளர்கள்.
பள்ளியில் சீனியர் மாணவர்கள் ஹாக்கி விளையாடுவதை பார்த்ததே அவரது கனவுக்கு விதை போட்டது. ஆறாம் வகுப்பில் கையில் மட்டையை எடுத்தவர், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரின் ஊக்கத்தால் மாவட்ட அளவிலான போட்டிகள் வரை முன்னேறினார்.
லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய ஜூனியர் ஹாக்கி போட்டியில் விளையாடியது அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.
அதன்பிறகு திருப்பூர் மாவட்ட ஜூனியர் அணியின் கேப்டனாக உயர்ந்தார். கல்லுாரியில் சேர்ந்த பின் பாரதியார் பல்கலைக்கழக அணிக்காக விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) அணியில் இடம்பிடித்து, தங்கப் பதக்கத்துடன் 13 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வென்ற அணியில் இடம் பெற்றார். தற்போது சென்னை வருமானவரித்துறை அணியின் மாற்று வீரராக பயிற்சி பெற்று வருகிறார்.
வெற்றி ஒரே நாளில் வராது. தினமும் செய்த பயிற்சிதான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்தது. கஷ்டம் எப்போதும் நிரந்தரமில்லை. மனம் தளராமல் உழைத்தால் வெற்றி நம்மைத் தேடி வரும்.
பெற்றோருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்பதே என்னுடைய மிகப் பெரிய ஊக்கம், என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் சுபாஷ்.
கனவு காணத் துணிந்த ஒரு கூலித் தொழிலாளியின் மகன்... இன்று தமிழக ஹாக்கியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.அந்த பயணத்துக்கே ஒரு பெரிய 'சபாஷ்!'
மேலும்
-
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
-
மலைக்கோவிலில் மகா நவசண்டியாகம் நிறைவு
-
பாசன கால்வாய்களில் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
-
நெற்பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம்
-
சென்டர் மீடியன் இல்லாத ராயக்கோட்டை சாலை தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அச்சம்
-
இதே நாளில் அன்று