சக்தி எஸ்டேட் வரை பஸ் இயக்க தொழிலாளர்கள் கோரிக்கை

வால்பாறை: வால்பாறை சக்தி எஸ்டேட் வரை பஸ் இயக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், கோவை, பொள்ளாச்சி, பழநி, சேலம், திருப்பூர், மன்னார்க்காடு ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தவிர வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்படுகிறது.

ஆனால், கவர்க்கல் எஸ்டேட் பகுதியிலிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள சக்தி எஸ்டேட் பகுதிக்கு, இது வரை பஸ் இயக்கப்படவில்லை. இதனால், இந்தப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள், சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தொழிலாளர்கள் கூறியதாவது:

சக்தி எஸ்டேட் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்டில், கூலி வேலை செய்கிறோம். வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் காலை, மாலை நேரத்தில் மட்டும், கவர்க்கல் வழியாக தலநார் வரை பஸ் இயக்கப்படுகிறது.

அங்கிருந்து, 3 கி.மீ., தொலைவில் சக்தி, மகாலட்சுமி, பிளண்டிவேலி உள்ளிட்ட ஐந்து எஸ்டேட்கள் உள்ளன. இந்தப்பகுதிக்கு பஸ் இயக்காததால், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, சக்தி எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி, கவர்க்கல் வழியாக தலநார் வரை இயக்கப்படும் அரசு பஸ்சை, சக்தி எஸ்டேட் வரை நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement