‘திறந்தவெளியில் குப்பை வீசி சென்றால் அபராதம்’

வால்பாறை: திறந்தவெளியில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என, பொதுமக்களுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வால்பாறை நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் வீடு தோறும் சென்று சேகரித்து வருகின்றனர்.

பெரும்பாலான மக்கள் குப்பையை துாய்மைப்பணியாளர்களிடம் வழங்காமல், அப்படியே தெருவில் வீசி செல்கின்றனர். இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவற்றை தரம் பிரித்து எடுத்துச்செல்வதிலும், அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

அதிகாரிகள் கூறுகையில், ‘நகராட்சியில் நாள் ஒன்றுக்கு எட்டு டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. வீடு மற்றும் கடைகளில் குப்பையை சேகரிக்க வரும் துாய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என, இருவகையாக தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும்.

தடையை மீறி தெருவில் குப்பை கொட்டினால் நகராட்சி சார்பில் அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். வால்பாறையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement