கிழக்கு கடற்கரை சாலையில் விபத்திற்கு வழிவகுக்கும் சீமை கருவேல மரங்கள்: 6 மாதமாக அகற்றப்படவில்லை

கீழக்கரை: ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி வரை 65 கி.மீ.,க்கு கிழக்கு கடற்கரை சாலையில் சீமைக் கருவேல மரங்கள் இருபுறங்களும் வளர்ந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு முள் மரங்களின் ஆக்கிரமித்துள்ளன.

கடந்த பிப்.,ல் பெயரளவிற்கு அகற்றப்பட்ட சீமைக் கருவேல மரங்கள் மீண்டும் வளர்ந்து விபத்திற்கு வழிவக்கிறது. தன்னார்வலர்கள் ஆய்குடி தட்சிணாமூர்த்தி மற்றும் கீழக்கரை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது:

ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி வழியாக கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையின் பராமரிப்பில் உள்ள நெடுஞ்சாலை துறையினர் தங்களுக்கான முக்கிய பணிகளில் ஒன்றான சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதை கடந்த ஆறு மாதங்களாக செய்யாமல் உள்ளனர்.

முன்பு சாலை பணியாளர்கள் மூலமாக உரிய முறையில் அகற்றுவார்கள். இப்பணி இப்போது நடக்கவில்லை. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாமல் வாரத்திற்கு 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடக்கின்றன. சீமைக் கருவேல மரங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே விபத்திற்கு வழி வகுக்கும் மரங்களை அகற்றிவிட்டு அவ்விடத்தில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் மெத்தனப் போக்கை கையாள்கின்றனர். இது குறித்து மக்கள் குறைதீர்க்கும் நாளில் பல மனுக்களை அளித்து வருகிறோம். எனவே போர்க்கால அடிப்படையில் விபத்திற்கு வழிவகுக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement