சொல்கிறார்கள் –––––––––––––– ‘தொழிலில் சந்தைக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும்!’ ––––––––––––––



‘மதராசி வேவ்ஸ்’ என்ற நிறுவனம் வாயிலாக, புடவைகள், வேட்டிகள், அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பிரத்யேக ஆடைகளை, சமூக வலைதளம் வாயிலாக விற்பனை செய்து வரும், சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சேர்ந்த ஹரி கார்த்திக்:

நான் எம்.பி.ஏ., முடித்துள்ளேன். எங்கள் ஊர், புடவை உற்பத்திக்கு பெயர் பெற்றது. மென்மையான பட்டுப் புடவைகளை நெய்வது, எங்கள் பகுதியின் தனி அடையாளம். அப்பா, மொத்த வியாபாரிகளுக்கு புடவைகள் விற்பனை செய்து வந்தார்.

படிப்பை முடித்து விட்டு, குடும்பத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டேன். சமூக வலைதளம் வாயிலாக, வர்த்தகம் செய்வது குறித்த தொழில் நுணுக்கங்களை அடிப்படையில் இருந்து கற்றுக் கொண்டேன். மொத்த வியாபாரிகளை நம்பாமல், வாடிக்கையாளரை நேரடியாக சென்றடையும் முறைக்கு மாறினோம்.

முதலில், 10,000 ரூபாய் முதலீடு செய்து, ‘வாட்ஸாப்’ வாயிலாக விற்பனையை ஆரம்பித்தேன். சில, ‘ஆர்டர்’கள் கிடைத்ததும், தனி இணையதளத்தை உருவாக்கினோம். அதற்கு, 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, எங்கள் தயாரிப்புகளை மட்டும் காட்டாமல், நெசவாளர்களின் உழைப்பு, தயாரிப்பு முறை, புதிய வடிவமைப்புகள் என அனைத்தையும் காணொளிகளாக எடுத்து வெளியிட ஆரம்பித்தோம். சமூக வலைதளங்களில் கிடைத்த வரவேற்பு, ‘ஆன்லைன்’ விற்பனையை வேகமாக உயர்த்தியது.

குடும்ப விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான பெயர், வடிவமைப்பு, நிறம் போன்றவற்றை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புடவைகளில் வடிவமைத்துக் கொடுக்க ஆரம்பித்தோம். அதுதான், மற்ற நிறுவனங்களில் இருந்து எங்களை தனித்து அடையாளப்படுத்தியது.

பொருளின் தரம், ‘பேக்கிங்’ என அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தினோம். அதனால், முதல் முறை வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும் மீண்டும் எங்களிடமே புடவைகள் வாங்க ஆரம்பித்தனர். இப்போது, 3,500க்கும் மேற்பட்ட தொடர் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்; ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது.

நான் மாற்றியது தொழிலை அல்ல; தொழில் முறையை தான். அந்த மாற்றம் தான், எங்களுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம். தற்போது, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன.

ஆரம்பத்தில் நஷ்டமாக தோன்றிய அனுபவங்களே, தொழிலுக்கான விதிமுறைகளை உருவாக்க உதவின. இன்று எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், அந்த அனுபவங்களை தான் முதலில் நினைத்து பார்க்கிறேன். தொழிலில் வெற்றி பெற, சந்தை மாறும் போது நாமும் மாற தயாராக இருக்க வேண்டும்.

***

* தொலைபேசி எண் கிடைக்காத காரணத்தால் வயது சேர்க்க முடியவில்லை பாஸ்!

***

Advertisement