குறைதீர் கூட்டத்தில் மனுவை பதிய காத்திருந்து மக்கள் அவதி: சர்வர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. கலெக்டர், மாவட்ட வருவாய் அலு வலர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இதனால் தங்கள் மனுவின் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாரந்தோறும் பல்வேறு குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தனியாகவும், கிராம மக்கள் கூட்டமாக வந்து மனு அளிக்கின்றனர். முதலில் இ-சேவை மையத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் பெயர், முகவரி, பதிவு செய்யப்பட்டு மனுஎண், பதிலளிக்க வேண்டிய துறை உள்ளிட்டவையுடன் மனு ரசீது வழங்குகின்றனர். வாரந்தோறும் 250 முதல் 350 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் புதிய கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மீதான நம்பிக்கையால் கடந்த சில வாரங்களாக 600 முதல் 800க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்படுகின்றன.

மேலும் இ-சேவை மையத்தில் சர்வர் சரிவர கிடைக்காததால் காலை 10:00மணிக்கு வரும் மக்கள் மதியம் 12:00 மணி வரை மனுவை பதிய மட்டும்காத்திருந்து சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில்,மனுவை பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பெயரை சொல்லி கூப்பிட மைக் வசதி இல்லாததால் சரியாக கேட்காததால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நேர விரயம், மன உளைச்சல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement