ரூ.50 லட்சம் கேட்டு வாலிபர் கடத்தல்: செய்யாறு அருகே 4 பேர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் 30 வயது மகனை, 50 லட்சம் ரூபாய் கேட்டு கடத்திய நான்கு பேரை போலீசார் இரண்டு மணி நேரத்திலேயே மீட்டு, அவர்களை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில், அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுரேந்திரன்,30. இவர், தந்தை தொழிலான அரிசி ஆலை நடத்துவது உள்ளிட்ட வியாபாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

காஞ்சிபுரம் அருகே டூ - வீலரில் நேற்று மதியம் சென்றுக் கொண்டிருந்த சுரேந்திரனை, வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், காரில் நேற்று மதியம் கடத்தியுள்ளனர்.

சற்று நேரத்தில் அவரது தந்தை ரவிக்கு மொபைல் போன் மூலம் அழைத்து, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக, காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்திடம், தந்தை ரவி புகார் அளித்தார்.

கடத்தப்பட்ட சுரேந்தரின் மொபைல் முதலில் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு ஆன் ஆகியுள்ளது. இந்த இடைபட்ட நேரத்தில், எந்த பகுதியில் இருந்து மொபைல் போனில் பேசினார்கள் என்ற விபரங்களை, மொபைல் டவர் மூலம் போலீசார் ஆராய்ந்தனர்.

அப்போது, செய்யாறு அருகே அவர்கள் இருப்பது தெரியவந்தது. இரு தனிப்படை போலீசார், நேரடியாக செய்யாறு அருகே சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டறிந்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, சுரேந்திரனை மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில், சிறுகாவேரிப்பாக்கம் தமிழ்மணி, 22; சாலவாக்கம் 17 வயது சிறுவன்; காஞ்சிபுரம் சந்தானகிருஷ்ணன்,34; காஞ்சிபுரம் திருக்காலிமேடு ராகுல், 23, ஆகிய நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரும் 17 வயது சிறுவன் என கூறப்படுகிறது.

கடத்தலுக்கு பயன்படுத்திய வாடகை கார், மொபைல் போன்கள் போன்றவை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement