மத்திய அரசு நடவடிக்கையால் மக்கள் பணம் ரூ.11,158 கோடி தப்பியது!
புதுடில்லி: சைபர் மோசடி எனப்படும் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட, 32.80 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களில், 11,158 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் மோசடி நபர்களிடம் செல்வது தடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மோசடிகளுக்கான உருவாக்கப்பட்ட, 3,718 மொபைல் போன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்கவும், பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கவும் 'ஐ4சி' எனப்படும் தேசிய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ், இணையவழி நிதி மோசடிகளை உடனடியாக தெரிவிக்க, 2021ல் சைபர் நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு தொடங்கப்பட்டது.
புகார்
இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன் லோக்சபாவில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
சைபர் நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்பட துவங்கிய கடந்த ஐந்து ஆண்டுகளில் 32.80 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு உள்ளன. அதில் பெரும்பாலான புகார்களுக்கு உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் 11,158 கோடிக்கும் அதிகமான பணம் சைபர் மோசடி நபர்களிடம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் கடந்த ஜூன் 30 வரை இணைய மோசடிக்காக உருவாக்கப்பட்ட 3,718 மொபைல் போன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. தேசிய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேலும், போலீஸ் அதிகாரிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில், சைபர் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 15.75 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளும், 5.77 லட்சம் மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களின் ஐ.எம்.இ.ஐ., எண்களும் முடக்கப்பட்டுள்ளன.
சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் அடையாள விபரங்களை பதிவு செய்யும், 'சந்தேக நபர் பதிவேடு' கடந்த 2024 செப்., 10ல் தொடங்கப்பட்டது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு
கடந்த ஜூன் 30 வரை, வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட 30.48 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் விபரங்கள் இந்த பதிவேட்டில் ஏற்றப்பட்டு உள்ளன. அதே போல் மோசடி பணத்தை மாற்ற பயன்படுத்தும் 32.08 லட்சம் வங்கி கணக்குகளும் கண்டறிந்து பதிவேட்டில் இணைக்கப்பட்டன.
இதன் மூலம் 25,698 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தேக பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சைபர் மோசடி புகார்களை கையாள்வதில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றுவதற்காக, தேசிய சைபர் குற்ற புகார் இணையதளம் மற்றும் சைபர் நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்புக்கான விரிவான வழிகாட்டு நடைமுறையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மோசடியில் இழந்த பணத்தை விரைவாக மீட்கும் வசதி, வங்கி கணக்குகளை முடக்குவது மற்றும் பண பரிவர்த்தனைக்கு தடை கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்க்கும் வசதி கடந்த ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
சைபர் மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, குறுஞ்செய்தி மற்றும் மொபைல் போன் அழைப்பின் போது குரல் பிரசாரங்கள், சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைப்பு
பள்ளிகளில் நிகழ்ச்சிகள், திரைப்பட விளம்பரங்கள், பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஐ.பி.எல்., போட்டிகளின்போது பிரசாரம் மற்றும் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன.
அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் வகையில் தேசிய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சூதாட்டத்தில் தகராறு ஒருவருக்கு கத்தி வெட்டு
-
கணக்கெடுப்புப்பணி ஆசிரியையை தாக்கிய போதை நபர் கைது
-
போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை
-
சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து5 பவுன் பவுன் நகை மற்றும் பணம் திருட்டு
-
பாகூர் அருகே குடிநீரில் கலந்த சோப்பு திரவம்: நுரையாக பொங்கி வந்ததால் பரபரப்பு
-
இடிந்து விழும் நிலையில் நீர்தேக்க தொட்டி