கோவில் நிதியில் கல்லுாரிகள் கட்டலாம்: அறநிலையத்துறை முடிவுக்கு கோர்ட் 'ஓகே'

1

சென்னை: கோவில் நிதியில் கல்லுாரிகள் தொடங்கும் உத்தரவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியில், கொளத்துாரிலும், பழநி தண்டாயுதபாணி கோவில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்துார் சுப்ரமணியசாமி கோவில் நிதியில் விளாத்திகுளத்திலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிதியில், திருச்செங்கோட்டிலும் கல்லுாரிகள் துவங்க அனுமதி அளித்து, தமிழக உயர் கல்வித் துறை செயலர், 2021ம் ஆண்டு அக்., 6ல் அரசாணை பிறப்பித்தார். 'அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிர்வாகத்தின் கீழ், சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் துவங்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.


'அறநிலையத் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றாமல், கோவில் நிதியை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்' என, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பரணிதரன் ஆஜராகி, ''சென்னை கொளத்துாரிலும், ஒட்டன்சத்திரத்திலும் கல்லூரிகள் அமைக்கப்பட்டு, மூன்று 'பேட்ச்' மாணவர்கள் படிப்பை முடித்து விட்டனர். திருச்செங்கோடு மற்றும் விளாத்திகுளத்தில் கல்லுாரிகள் இன்னும் அமைக்கப்படவில்லை. ''கொளத்துார் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள கல்லுாரிகளில், ஹிந்து சமய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன,'' என்றார்.


மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''கோவில் நிதியை கல்லுாரிகள் கட்ட பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை,'' என குற்றம் சாட்டினார்.


இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தலாம்' என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும், 'விளாத்திகுளம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் கல்லுாரி கட்ட கூடுதல் நிதி தேவைப்பட்டால், அரசின் உதவியை நாடலாம். 'மீதமுள்ள ஆறு கல்லுாரிகளை கட்டுவது தொடர்பாக அரசே முடிவெடுத்து கொள்ளலாம். கோவில் உபரி நிதியை சட்ட விதிகள்படி பயன்படுத்த வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.

Advertisement