த.வெ.க., - எம்.எல்.ஏ., மனைவி சாலை விபத்தில் படுகாயம்

1

ஓசூர்: ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணனின் மனைவி உமாவதி, 26, கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் த.வெ.க., - எம்.எல்.ஏ., சரவணன். இவரது மனைவி உமாவதி, கர்நாடக மாநிலம், தும்கூரில் உள்ள தனியார் சட்டக்கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கிறார். தன் தம்பி பொன்ராஜ், 24, மற்றும் இரு பெண்கள், ஒரு குழந்தையுடன், 'சுசூகி ஸ்விப்ட்' காரில், கிருஷ்ணகிரி நோக்கி நேற்று சென்றார்.

அதிகாலை, 3:00 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளியில் சென்ற போது, முன்னால் சென்ற பிக்கப் வாகன டிரைவர், வேகத்தடை இருந்ததால் திடீரென வாகனத்தின் வேகத்தை குறைத்தார்.

இதில், உமாவதி சென்ற கார், பிக்கப் வாகனம் பின்னால் மோதியதில், காரின் முன் இருக்கையில் இருந்த உமாவதி படுகாயமடைந்தார். பொன்ராஜ் மற்றும் உடன் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். உமாவதி, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement