ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:ரேஷன் அரிசி கடத்தல்கள் அதிகரித்து வருவதால், எல்லையோர சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவில் தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
சிறிய அளவில் கடத்துவோர், புறநகர் மின்சார ரயில்களிலும், டன் கணக்கில் கடத்துவோர் சாலை மார்க்கமாகவும் கடத்தி செல்கின்றனர்.
சாலை மார்க்கமாக கடத்துவோர், பெரும்பாலும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை தான் பயன்படுத்துகின்றனர். அரிசி கடத்தலுக்கு, சரக்கு ஆட்டோ முதல் மினி லாரி வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரகசிய தகவல் கிடைத்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட வாகனத்தை மடக்கி பிடித்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்ய முடிகிறது.
ஆனால், மறைமுகமாக நடக்கும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள, தமிழக ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும், தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள், எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை.
இதனால், தமிழகத்தில் இருந்து மேற்கண்ட சோதனைச்சாவடி வழியாக, தினசரி டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை, குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், 24 மணி நேரமும் கண்காணித்து, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.