வேளாண் காடு திட்டம் தோட்டக்கலைத்துறை சார்பில் மதுரையில் பசுமைப்பரப்பை அதிகரிக்க இலக்கு

மதுரை: மதுரையின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் இந்தாண்டும் செயல்படுத்தப்படுகிறது.

தமிழக வனப்பரப்பு சராசரி 20.34 சதவீதமாக உள்ள நிலையில் மதுரையின் வனப்பரப்பு சராசரி 15.12 சதவீதமாக, மிகவும் குறைவாக உள்ளது. இதுவே திண்டுக்கல்லில் 31.28, தேனியில் 42.44 சதவீதமாக உள்ளது. வேளாண் நிலங்களில் மரங்களின் பரப்பளவை அதிகரிக்கும் அதே நேரத்தில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் மூன்றாண்டுகளுக்கு முன் வேளாண் காடு வளர்ப்புத்திட்டம் உருவாக்கப்பட்டது. தலா 25ஆயிரம் வீதம் இரண்டாண்டுகளில் விவசாயிகளின் நிலங்களில் 50ஆயிரம் மரக்கன்றுகள், பழ மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்தாண்டு 50ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் சூழலுக்கு ஏற்றவாறு மகோகனி, செம்மரம், சந்தனம், ஈட்டி (ரோஸ்வுட்), தேக்கு மரக்கன்றுகளும் சீத்தா, நெல்லி, எலுமிச்சை பழமரக்கன்றுகள் தோட்டக்கலைத்துறை பண்ணை நர்சரிகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தரிசு நிலங்களில் குறைந்த அடர்த்தி நடவு முறையில் ஒரு எக்டேருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 1000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். பிறவகை பயிர்கள் பயன்பாட்டில் உள்ள நிலத்தின் வரப்போரங்களில் நடவு செய்ய எக்டேருக்கு 160 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக 2 எக்டேருக்கு 320 கன்றுகள் வழங்கப்படும்.

தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: மரப்பயிர்கள் வளர்ப்பதன் மூலம் மதுரையின் பசுமை பரப்பளவை அதிகரிக்க முடியும். பசுமை வாயுக்களின் அளவை குறைக்கலாம். வேலிப்பயிராகவும் மரக்கன்றுகளை விவசாயிகள் வளர்க்கலாம். குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து அவற்றை வெட்டும் போது நல்ல வருமானம் கிடைக்கிறது. முதல் யூனிட்டில் ஓராண்டு வயதுடைய இரண்டு முதல் மூன்றடி உயரமுள்ள 25 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. இவை செப்., அக்.,ல் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அடுத்த யூனிட்டில் 25ஆயிரம் மரக்கன்றுகள் தயாரிக்கப்பட்டு ஜனவரியில் வழங்கப்படும்.

விவசாயிகளின் தரிசு நிலத்தில் மரப்பயிர்களை வளர்த்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும். ஆதார் எண், பட்டா, சிட்டா, அடங்கல், தரிசுநில விபரம் அடங்கிய சிட்டா, பிற ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகலாம் என்றார்.

Advertisement