நெல்முடிக்கரை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் புகுந்த கழிவு
திருப்புவனம்:திருப்புவனத்தில் இரு நாட்களாக பெய்த மழை காரணமாக வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கழிவு நீர் புகுந்ததால் அலுவலர்கள், பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
திருப்புவனம் நெல்முடிக்கரை குரூப் வி.ஏ.ஓ., அலுவலகம் உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது. தெருவில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படவில்லை.
திருப்புவனத்தில் கடந்த இரு நாட்களாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது.
மழை காரணமாக வாய்க்கால் அடைபட்டதால் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து வி. ஏ. ஒ., அலுவலகத்தில் புகுந்தது. அலுவலகத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால் அலுவலர்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
ஆவணங்கள் அனைத்தையும் ஊழியர்கள் மாற்றி நனையாமல் பாதுகாப்பாக வைத்தனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் நாட்களில் கழிவு நீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாததால் மழைநீருடன் கழிவு நீரும் அலுவலகத்தில் புகுத்து விடுவதாகவும், அதன் பின் 10 நாட்கள் வரை அலுவலகத்தை பயன்படுத்த முடிவதில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.