சுதந்திர தின விழா செலவு வருவாய்த்துறை எதிர்பார்ப்பு

மதுரை: ‘‘சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் விழா செலவுகளுக்கு அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்’’ என்ற வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது: விழாக்களை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு ரூ. ஒரு லட்சம் வரை வழங்கும். அந்நிதி வரத்தாமதமாவதால் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் செலவிடுவர். அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்கும் சுதந்திர தின விழாவில் பந்தல், ஒலிஒளி அமைப்பு, வாகனங்கள், தியாகிகளுக்கு பொன்னாடை, விருது, காலை, மாலை உணவு உட்பட செலவினங்கள் ரூ. 2 லட்சத்தைத் தாண்டிவிடும்.

இந்த செலவை நாங்கள் மட்டுமே ஏற்க வேண்டியுள்ளது. அதேசமயம் அரசு நிதி தரும்போது, அது மாவட்ட நிர்வாகத்தைத் தாண்டி தாலுகா, கிராம அளவில் சென்று சேருவதில்லை. இதனால் சொந்த காசை போட்டு செலவு செய்த அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.

சிலர் இழப்பை சரிகட்ட ‘கைநீட்டும்’ அளவுக்கு நிலைமை மாறிவிடுகிறது. எனவே லஞ்ச ஒழிப்பில் தீவிரமாக உள்ள த.வெ.க., அரசு விழாக்களுக்கு போதிய நிதியை உரிய நேரத்தில் உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

Advertisement