டூவீலரில் வந்து கும்பல் அட்டகாசம் கிராமத்தில் புகுந்து 3 பேருக்கு வெட்டு செய்தியாளர்களை மிரட்டிய போலீஸ்
மானாமதுரை,ஆக.13-
மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, பிராமணக்குறிச்சி ஆகிய கிராமங்களில் அடையாளம் தெரியாத 7 பேர் அரிவாளால் வெட்டியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
மானாமதுரை அருகே உள்ள தெ. புதுக்கோட்டை வண்ணத்தான் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் 42,என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் முளைக்கொட்டு திண்ணையில் துாங்கிக் கொண்டிருந்தார். அவ்வழியாக டூவீலர்களில் வந்த அடையாளம் தெரியாத 7 பேர் ராஜேந்திரனை அரிவாளால் வெட்டினர். இதனைக் கண்ட சின்னச்சாமி என்பவர் அவர்களை தடுத்த போது அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும், கார்களின் கண்ணாடிகளையும் நொறுக்கி விட்டு டூவீலரில் அருகில் உள்ள பிராமணக்குறிச்சி கிராமத்திற்கு சென்று பூமிநாதன் என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற இடங்களை எஸ்.பி., அபிஷேக் குப்தா, டி.எஸ்.பி.,க்கள் லோகநாதன், அமலஅட்வின் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
மானாமதுரை, இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இச்சம்பவங்களை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் இளையான்குடி போலீசார் வீடியோ எடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.