பள்ளி கல்லுாரி அருகேபுகையிலை விற்பனை

சிவகங்கை,ஆக.13-

சிவகங்கையில் பள்ளி கல்லுாரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சிகரெட் பொருட்கள் மறைமுகமாக விற்கப்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க போலீசார் சோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடிய புகையிலை, சிகரெட், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவோருக்கு புற்றுநோய், உளவியல் பிரச்னைகள் ஏற்படுகின்றன. சிகரெட்டால் புகைப்பிடிப்போர் மட்டுமின்றி அருகில் நிற்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லுாரி அருகே இதனை விற்க அரசு தடை விதித்தது. பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்வதை முற்றிலும் நிறுத்தினர். ஒரு சிலர் கூடுதல் லாபம் சம்பாதிக்க அரசு விதியை கண்டுகொள்ளாமல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கூடுதல் விலைக்கு மறைமுகமாக விற்பனை செய்கின்றனர்.

நகரில் பள்ளி கல்லுாரி அருகே உள்ள கடைகளில் சர்வ சாதரனமாக சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எதிரே உள்ள கடைகளில் சிலர் சிகரெட் விற்பனை செய்வதாகவும், இதனால் நோயாளிகள் உறவினர்கள் கூட தங்குபவர்கள் மருத்துவமனை வளாகத்தில் சிகரெட் புகைப்பதால் அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நகர் போலீசார் பள்ளி கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள கடைகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை வளாகங்களை ஒட்டி தேவையின்றி நிற்பவர்களை சோதிக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். 

Advertisement