பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவு; 12 மசோக்கள் மட்டுமே நிறைவேற்றம்

1


புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவு அடைந்ததை தொடர்ந்து, 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்தார்.

கடந்த மாதம் ஜூலை 20ம் தேதி துவங்கிய பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி சம்பவம், ராமர் கோயில் அறக்கட்டளை நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையில் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. லோக்சபா ஒத்தி வைக்கும் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: இரு அவைகளிலும் ஏற்பட்ட இடையூறுகள் ஒட்டுமொத்த செயல்பாடுகளை கடுமையாக பாதித்தன.

பணிசார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை, இது மிகவும் வெற்றிகரமான கூட்டத்தொடராக இருந்தது; நாங்கள் மொத்தம் 12 மசோதாக்களை நிறைவேற்றினோம். இருப்பினும், விவாதம் மற்றும் கலந்துரையாடலைப் பொறுத்தவரை, அது அந்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை.

ஒதுக்கப்பட்ட மொத்த நேரத்துடன் ஒப்பிடுகையில், லோக்சபாவின் செயல்பாடு 19 சதவீதம், ராஜ்யசபாவின் செயல்பாடு 39 சதவீத ஆகும். எதிர்க்கட்சிகள் செய்த இடையூறுகள் அவையின் செயல்பாடுகளை சீர்குலைத்ததுடன், அவ்வப்போது வெளிநடப்பும் செய்தன. இருப்பினும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்களும், சில எதிர்க்கட்சி எம்பிக்கள் விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தொடரின் போது லோக்சபாவில் ஒரே ஒரு மசோதா மீது மட்டுமே முழுமையான விவாதம் நடைபெற்றது. தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுப்பதையும், முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா குறித்து பார்லிமென்டின் இரு அவைகளிலும் முழுமையாக விவாதிக்கப்பட்டது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

வீணாகும் மக்கள் வரிப்பணம்!

பார்லிமென்ட்டில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு மணி நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. எந்தவொரு விவாதத்தையும் நடத்தவிட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. இதனால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதிலும், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டதால், ஏற்பட்ட நிதியிழப்பும், ஜனநாயக பின்னடைவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தொகுதி பிரச்னைகளையும், நாட்டின் முக்கிய விவகாரங்களையும் எம்.பி.,க்களால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை.

இரு சபைகளும் முடங்குவதால் ஒருபுறம் மக்களின் வரிப் பணம் வீணாவதுடன், மறுபுறம் மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத சூழலும் ஏற்படுகிறது.

Advertisement