பயணிகள் அவதி ராமநாதபுரத்தில் நேரத்திற்கு இயக்கப்படாத டவுன் பஸ்கள் மகளிர் இலவச பஸ்கள் அனைத்து ஸ்டாப்களில் நிற்பதில்லை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் குறித்த நேரத்திற்கு வராததாலும், பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தினமும் சிரமப்படுகின்றனர். மகளிருக்கான இலவச பஸ்கள் அனைத்து பஸ் ஸ்டாப்களில் நிற்பது இல்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அரண்மனை, பழைய, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பட்டணம்காத்தான், தேவிபட்டினம், பெரியபட்டினம், உத்தரகோசமங்கை, புத்தேந்தேல், பொன்னக்கநேரி, சத்திரக்குடி, திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் அரசு டவுன் பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் காலையில் குறித்த நேரத்திற்கு வராமல் 10 முதல் 15 நிமிடங்கள் வரையும், சில நாட்கள் அரைமணி நேரம் வரையும் தாமதாக வருவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் காத்திருந்து சிரமப்படுகின்றனர். குறிப்பாக மகளிர் இலவச பயணம் பஸ்கள் பெயரளவில் இயக்கப்படுகின்றன.
அப்படியே வந்தாலும் அனைத்து பஸ் ஸ்டாப்களிலும் நிற்பது இல்லை. பெண்கள் கூட்டம் அதிகாக இருந்தால் வேண்டும் என்றே சில டிரைவர்கள் பஸ் ஸ்டாப்பை விட்டு தள்ளி சற்று துாரத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் இலவச பஸ்களில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், நேரத்திற்கு பஸ்கள் வராததாலும், இலவச பஸ் குறிப்பிட்ட பஸ்ஸ்டாப்பில் நிற்கும் என்பது உறுதி இல்லாததால் முதலில் வரும் பஸ்சில் போட்டி போட்டு ஏற வேண்டியுள்ளது. காலை, மாலை நேரத்தில் கிடைக்கும் பஸ்சில் ஊர் போய் சேர வேண்டும் என்பதற்காக சில மாணவர்கள் பஸ்சில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
எனவே ஏழை மக்களின் நலன் கருதி மகளிர் இலவச பஸ்கள் அனைத்து ஸ்டாப்களிலும் நின்று செல்ல வேண்டும். பள்ளி, கல்லுாரி, அலுவலக நேரங்களில் இயக்கப்படும் பஸ்கள் குறித்த நேரத்திற்கு வந்து செல்வதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட வேண்டும் என்றனர்.–