நிரந்தர பணியாளர் தவிர்ப்பு தற்காலிக பணியாளர் தவிப்பு
சோழவந்தான்: மதுரை மாவட்ட கிராம சபைகளில் பார்வையாளர்களாக வேண்டுமென்றே நிரந்தர பணியாளரை தவிர்த்து, தற்காலிக பணியாளரை நியமிக்கும் போக்கு நிலவுகிறது.
அரசியலமைப்பு விதிகளின் படி ஊராட்சிகளில் ஆண்டுதோறும் 6 தினங்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இதில் வரவு,செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள் மக்களின் முன் தாக்கல் செய்வர். மேலும் மக்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும்.
நாளை (ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைகூட்டம் நடக்க உள்ளது. இதில் அந்தந்த ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் முதல், 2ம் நிலை அரசு பணியாளர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் கிராமசபையை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்குவர்.
நிரந்தர பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தால், தற்காலிக பணியாளர்களை பார்வையாளராக நியமிக்கும் நடைமுறை உள்ளது. ஆனால் ஊராட்சி பிரச்னைகளால் தங்களுக்கு சிக்கல் வந்துவிடுமோ எனக் கருதி நியமனத்திற்கு முன்பே நிரந்தர பணியாளர்கள் தங்களது பெயர்களை நீக்கச்செய்து விடுகின்றனர். அந்தப் பணியில் தற்காலிக பணியாளர்களை ஈடுபடுத்துகின்றனர்.
இதனால் தற்காலிக பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். கிராம சபையில் அதிகாரிகளிடம் மனுகொடுக்க காத்திருக்கும் மக்களும் அதிகாரிகள் வராததால் ஏமாற்றமடைகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும்.