வீடுகளில் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த எளிய வழிமுறைகள்!
செ ன்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் புதிதாக வீடு கட்டுவோர் சமீபகாலமாக குறிப்பிட்ட சில பிரச்னைகளை தொடர்ந்து சந்திப்பதாக கூறுகின்றனர். அதானது, பாரம்பரியமாக உள்ள செங்கல், மணல் போன்ற பொருட்களை பயன்படுத்தி வீட்டை கட்டினாலும் அதில் பயன்படுத்தும் போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
பொதுவாக, அக்கம்பக்கத்தில் கான்கிரீட் கட்டடங்கள் அதிகம் உள்ள இடங்களில் தான் வீடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அக்கம் பக்கத்தில் வீடுகளே இல்லாத இடங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.
புதிதாக வீடு கட்டும் போது அதில் வெப்பத்தின் தாக்கம் ஏன் ஏற்படுகிறது, அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பது மக்களின் கேள்வியாக அமைந்துள்ளது. இயல்பான நிலையில் கான்கிரீட் பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்களில் வெப்பம் கடத்தும் திறன் சற்று அதிகமாக இருக்கும்.
அதற்காக, கான்கிரீட்டை தவிர்த்து வேறு வகை பொருட்களை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டுவது தற்போது சாத்தியமில்லை. எனவே, இந்த வழிமுறையை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்களில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் முதலாவதாக, கட்டடத்தின் மேல் தளத்தில் கான்கிரீட் பணிகள் முடிந்த நிலையில் நீர்க்கசிவு தடுப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது, நீர்க்கசிவு தடுப்பு என்பதுடன் வெப்பத்தடுப்பு என்ற அடிப்படையிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கலாம். கட்டடங்களின் மேல் தளத்தில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க, வெப்பத்தடுப்பு பதிகற்கள் வந்துள்ளன.
இது மட்டுமல்லாது, மேல் தளத்தின் வெளிப்புற பகுதியில் வெப்பத்தடுப்புக்கான பூச்சு வகைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வழிமுறைகளை பொறியாளர் உதவியுடன் கடைபிடித்தால் வீடுகளில் வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவுக்கு குறைக்கலாம்.
இத்துடன், கட்டடங்களில் அதிக அளவு ஜன்னல்கள் அமைத்தால் காற்றோட்டம் இருக்கும், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால், தேவையான இடங்களை தவிர்த்து பிற இடங்களில் ஜன்னல்கள் அமைப்பதன் வாயிலாக வெளியில் இருந்து வெப்பக்காற்று வீட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
எனவே, தேவையான இடங்களில் மட்டும் ஜன்னல் அமைப்பது அதிலும், வெப்பத்தடுப்பு அடிப்படையிலான கண்ணாடிகளை கதவுகளில் பயன்படுத்துவது பாதிப்பை குறைக்க உதவும். இத்துடன் சுவர்களில் முறையாக பூச்சு வேலை செய்வதன் வாயிலாகவும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.
***
பாயிண்ட்
அதிக அளவு ஜன்னல்கள் அமைத்தால் காற்றோட்டம் இருக்கும், வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று மக்கள் நினைக்கின்றனர், ஆனால், தேவையில்லாத ஜன்னல்களை தவிர்ப்பதாலும், இருக்கும் ஜன்னல் கதவுகளில் வெப்பத்தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
***