மழை குறைந்தும் அருவியில் நீர்வரத்து
வால்பாறை: வால்பாறையில், மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள அருவியில் நீர்வரத்து இருப்பதை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 4ல் துவங்கியது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக வால்பாறையில் மழை பொழிவு குறைந்து சாரல் மழை பெய்யும் நிலையில், ஆறு மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன விவசாயிகளும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில் நேற்று காலை, 105.59 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 827 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,375 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.