பேச்சு, பேட்டி, அறிக்கை
அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் சசிகலா பேச்சு:
தமிழக கிராமங்களின் இயற்கை அழகை சினிமாவில் எடுத்துக் காட்டியவர், பாரதிராஜா. இன்றைய இளைய சமூகத்தினரின், ஏ.ஐ., போன்ற நவீன தொழில்நுட்பத்தை நாம் வியப்பாக பார்க்கிறோம். ஆனால், பாரதிராஜா முன்பே இது போன்ற, 'டெக்னாலஜி'யை கொண்டு வந்து விட்டார். சினிமாவை கடந்த சிறந்த அரசியல் ஞானம் கொண்டவர் அவர். எம்.ஜி.ஆர்., மறைந்ததும், அவரது உடலுக்கு உடை மாற்றி, அவரை அலங்கரித்து, 'மேக்கப்' போட்டவர் பாரதிராஜா.
பாரதிராஜா, ஒரு பிறவி படைப்பாளி என்பதில் மாற்று கருத்து இல்லை... உங்க ஆதரவில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில், அவரை கவுரவிச்சிருக்கலாமே!
மா.கம்யூ., கட்சியின், தமிழக செயலர் சண்முகம் பேட்டி:
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை; அவர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயநிதியை கைது செய்தது மாதிரி, நயினாரையும் அதிரடியாக கைது செய்து, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குரியது தான்!
பா.ஜ., தமிழக பொதுச்செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, முதல்வர் அலுவலகத்தை மாற்றும் பணிகளை மேற்கொள்ள, குறுகிய கால, 'டெண்டர்' விடப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மீண்டும் இதே பணிகளுக்கு பொதுப்பணித் துறை சார்பில் மறு டெண்டர் வெளியிடப்பட்டது ஏன்? மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் பணிகளில், இத்தகைய குழப்பங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது?
'முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கணும்'னு, நினைக்கிற அதிகாரிகள் தான் இந்த மாதிரி குளறுபடிகளை செய்றாங்களோ?
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கை:
கோவையில் கல்லுாரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், சென்னை திருவொற்றியூரிலும் அரசு பள்ளி மாணவர் தனுஷ், கஞ்சா பழக்கத்தை தட்டிக் கேட்டதற்காக, சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் மற்றும் குழு மோதல்களை தடுக்கும் வகையில், சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களை சீரழிக்கும் போதை கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு, த.வெ.க., அரசு ஒடுக்கணும் என்பதில் மாற்று கருத்துக்கே இடமில்லை!
மேலும்
-
இந்தியாவில் 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவழக்குகள்; முழு பட்டியல் இதோ!
-
2 நாட்களாக உயரும் தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு
-
கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்; நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
-
எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவியின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்; ராகுலுக்கு அறிவுறுத்தல்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
-
தொடர்ச்சியாக 30 மணி நேரம் வானில் பறக்கும் தாக்குதல் ட்ரோன்கள்; குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை