பார்வையற்ற ஆசிரியை பதிவேட்டில் விளையாடும் சக ஆசிரியர்கள் மீது புகார்

கோவை: இருகூர் பேரூராட்சி பாரதி நகரில், அரசு நலத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 292 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு கோவை மாவட்ட பட்டியல் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் செந்தில்ராஜ் கூறுகையில், ‘‘குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் தொடர்ந்து காலதாமதம் நீடிக்கிறது. பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. நீதிமன்ற தடையாணை எதுவும் இல்லாத நிலையில், பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மின் இணைப்பு வழங்க முடியும்.  உரிய நிதி பெற்று வீடுகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும்,’’ என்றார்.



பணி நிரந்தரம் வேண்டும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவ பணியாளராக பணிபுரியும் மாற்றுத்திறனாளி மதன்குமார் கூறுகையில், ‘‘எனது மனைவியும் மாற்றுத்திறனாளி. ஒன்றரை வயதில் குழந்தை இருக்கிறது. குறைந்த ஊதியம் என்பதால் குடும்ப சூழல் சிரமமாக உள்ளது. கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணிபுரிந்த என்னை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு பணியாளர் தேர்வில் முன்னுரிமை வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,’’ என கோரியுள்ளார்.

பார்வையற்றோரின் பரிதாபம் ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியை ஸ்ரீதேவி கூறுகையில், ‘‘என் பார்வையற்ற நிலையினை பயன்படுத்தி, பணிப்பதிவேட்டில் தவறான விவரங்களை பதிவு செய்யும் இரு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

முதியோர் உதவித்தொகை அன்னூரை சேர்ந்த சரஸ்வதி கூறுகையில், ‘‘2018 முதல் நிறுத்தப்பட்ட முதியோர் ஓய்வூதியத் தொகையை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

இதே கோரிக்கையுடன் பலரும் மனு அளிக்க வந்ததை காண முடிந்தது.  கூட்டத்தில் இலவச வீடு, பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 404 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 13 மனுக்கள் உட்பட 610 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement