வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்

மயிலம் ஆக 18-: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த சிலர், ஒரு வேனில், தென் மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு சுற்றுலா சென்றனர். ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்னை நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இரவு 9:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில், வேன் வந்தபோது திடீரென இடதுபுற பின் டயர் வெடித்து, சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் கோபி, 38; கமலதாசன் 41; வெங்கடேஷ் 44; ஜெயக்குமார் 52; உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement