குழந்தைகளுடன் கர்ப்பிணி தர்ணா விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தனது 3 குழந்தைகளுடன் கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி அடுத்த மேலச்சேரியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மனைவி மகேஸ்வரி, 32; ஐந்து மாத கர்ப்பிணியான இவர் தனது மகள்கள் யாழினி, 13; மித்ரா, 7; யோகஸ்ஸ்ரீ, 4; ஆகியோருடன் தங்களுக்கு தாங்களே கண்ணீர் அஞ்சலி என போஸ்டரில் எழுதியபடி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மகேஸ்வரி கூறுகையில், 'குடிபழக்கமுடைய தனது கணவர் கமலக்கண்ணனை தங்கள் வசமாக்கி, எங்களுக்கு தெரியாமல் நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை சிலர் செஞ்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரயம் வாங்கி விட்டனர். இதையடுத்து வீட்டை கிரயம் பெற்ற நபர்கள் என்னையும், என் குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறு தாக்கி மிரட்டி வருகின்றனர்.
இது குறித்து செஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நானும் என் குழந்தைகளும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்துவிட்டோம்' என்றார்.இதையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்று மகேஸ்வரி கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.